Wednesday 17 June 2020

மாணவர் வளர்ச்சி ஆசிரியர் கையில்!!

"எந்தத்தொழிலும் இழிவல்ல. செய்யும் தொழிலே தெய்வம்", என்று நினைக்க வேண்டும். எந்தத் துறையில் அல்லது தொழிலில் ஈடுபட்டாலும் அந்த துறையை அல்லது தொழிலை நாம் கௌவரப்படுத்த வேண்டும். அந்தத்தொழிலில் மாறி வரும் நவீன உலகிற்கேற்ப புதுமைகளைப் புகுத்த வேண்டும். 
              
அந்தத் தொழிலை மேன்மை அடையச் செய்ய தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.திறமையை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சி, ஆலோசனை, தொழில் தொடர்பான நூல்களைப்படித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். 
"முடியும் என்றால் முயற்சி செய், 
முடியாது என்றால் பயிற்சி செய் ". 

நாம் செய்யும் தொழிலுக்கு தேவையான குணநலன்களை, திறமைகளையும் வளர்த்துக்கொண்டால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பிறர் உங்களிடம் இருந்து செயலைச் செய்யும் வழிமுறைகளை கேட்பார்கள். 

அதிலும் ஆசிரியர் பணி அறப்பணி, அற்புதமான பணி. வருங்கால இளைஞர்களை வார்த்தெடுக்கின்ற சமூகப் பணி. 

'ஆசிரியர் பணி அறப்பணி, 

அதற்கே உன்னை அப்பணி '

ஆசிரியர் பணியில் தன்னை முழுவதும் அர்ப்பணித்துப்பணியாற்றிய ஆசிரியப்பெருமக்கள் பலர் அன்று முதல் இன்று வரை  உள்ளனர். 

தத்துவ மேதை டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இந்திய தத்துவம் குறித்து 

சிறந்த நூல் தீட்டும் படி வழி காட்டியவர் அவரது ஆசான் பேராசிரியர். முயர்ஹெட்  (Prof. Muirhead ) என்பவர் தான்.

மாவீரன் அலெக்ஸாண்டரை உருவாக்கியதில் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்கு மகத்தான பங்கு உண்டு. பல துறைகளிலும் அறிவு பல்கிப் பெருக வேண்டும் என்ற ஆவல் மிகுந்த அலெக்ஸாண்டருக்கு, அந்த ஆவலைப் பூர்த்தி செய்தவர், அரிஸ்டாட்டில் என்ற தத்துவ மேதை தான். அரிஸ்டாட்டில் ஆசிரியரிடம் பற்று கொண்டு அவர் கருத்துக்கள் பின்பற்றி உலகம் போற்றும் மாவீரனாக திகழ்ந்தவர் அலெக்ஸாண்டர். 
அலெக்ஸாண்டர் போருக்குப்போகும் போது
அரிஸ்டாட்டில் விளக்க உரை எழுதிய இலியத் என்ற காவியத்தைக் கையோடு எடுத்துச்சென்று கண்ணயரும் போது படிப்பாராம். 
"உன்கடமையைச் செய், உனக்கு வேண்டியவைத்தவறாது கிடைக்கும்."
என்ற வரிகள்  நம்மை மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்குவிக்கும். 
என்சரிதம் என்ற தலைப்பில் சுயசரிதை எழுதிய உ.வே.சா .வின் ஆசிரியர் தியாகராசசெட்டியார். தியாகராசசெட்டியார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். ஆசான் தியாகராசசெட்டியார் வரலாற்றை மாணவர் உ. வே.சா எழுதியுள்ளார், எனில் அந்த ஆசான் எந்த அளவு மாணவர் மனதில் பதிந்துள்ளார் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகிறது. 
எல்லாரும் பார்த்து ரசிக்கும் மலர் போல வாழக் கற்றுக்கொள். என்ற வரிகளை மனதில் வைத்துக்கொண்டு செய்யும் தொழிலை சிறப்பாகச் செய்யுங்கள். 
"புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி"
நாம் பிறரால் புகழப்பட வேண்டும் என்றால் செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும். 
திறமையும் பண்பும் நிறைந்த ஆசிரியர்களால் தான் மாணவர்கள் வளர்ந்து முன்னேறுவார்கள்.
சமூக அக்கறையுடனும், ஈடுபட்டுடனும், ஆர்வமுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். 
மாணவர்கள் முன்னேற்றம் ஒன்றையே மனதில் வைத்திருக்கும் ஆசிரியர்களால் தான் இந்தச் சமூகம் மேன்மை அடையும். 
மாணவர் வளர்ச்சி ஆசிரியர் கையிலே. 
என்பது உங்களுக்கு புரிகிறதா? 



1 comment:

Super useful ideas thank you reading