துறவி ஒருவர் ஆற்றங்கரை ஓரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு தண்ணீர் மீது நடந்து சாதனை புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதற்காக நாற்பது ஆண்டுகளாக வழிபாடு, மந்திரம் என முயற்சி செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்.
துறவி விஷ்ணு பக்தர் என்பதால் அசைவ உணவுகளைத்தவிர்த்து மற்ற சைவ உணவு வகைகளை உண்டு வந்தார். அதன் பிறகு சில ஆண்டுகளாக பால் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டார்.
அவருக்கு ஆற்றின் மறுகரையில் வாழும் சிறுமி தினமும் பால் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.அந்த காலம் மழை காலமாக இருந்தது. வானமும் கருமேகங்களால் சூழ்ந்து இருந்தது.
ஒரு நாள் அந்த சிறுமியின் தாய், "மகளே, வானம் மப்பும், மந்தாரமுமாக இருக்கிறது. கனமழை வந்தால் ஆற்றைக்கடந்து போவது சிரமாக இருக்கும். எனவே நாளைக்கு பால் கொண்டு வர முடியாது என்று துறவியிடம் சொல்லிவிடு" என்று கூறி அன்றைய பாலைக் கொடுத்துமகளை அனுப்பி வைத்தார்.
அந்தச் சிறுமி தாய் சொன்ன வார்த்தையை நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். சிறுமி தன் தாய் சொன்ன வார்த்தையை அப்படியே அந்த துறவியிடம் கூறினாள். அவரோ " குழந்தாய், ஆற்று வெள்ளத்தைப் பார்த்து நீ கவலைப்படாதே! கண்களை மூடிக் கொண்டு நான் கூறும் மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே நட, ஆற்று நீர் மீது நீ கடந்து வரலாம் " என்று கூறி விட்டு அவளுக்கு மந்திரத்தைப் போதித்தார்.
மறுநாள் மாலை வேளை பால் கொண்டு செல்ல சிறுமி தயார் நிலையில் நின்றாள். அப்பொழுது தீடீரென மின்னல் வெட்டியது, இடி இடித்துக் கொண்டு மழைக்கொட்டியது.சிறிது நேரத்தில் மழை குறைய சிறுமி பால் கொடுக்க தயாரானாள். மழைக்காரணமாக ஆற்றில் தண்ணீர் வர ஆரம்பித்தது. இதனால் சிறுமியின் தாய், இன்று போகவேண்டாம் என்று தடுத்தாள். "அம்மா! ஆற்று நீரைக் கடக்கும் மந்திரத்தை துறவி எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். நீங்கள் கவலைப்பட வேண்டாம் " என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.
ஆற்றங்கரை வந்தடைந்த சிறுமி கண்களை மூடிக் கொண்டு மந்திரத்தைக் கூறிக் கொண்டு ஆற்று நீர் மேல் நடக்க ஆரம்பித்தாள். அக்கரையில் இருந்த துறவியிடம் பாலைக் கொடுத்தாள். துறவிக்கு ஒரே வியப்பு கண்கள் பார்ப்பது கனவா?, உண்மையா? என்று உற்றுப்பார்த்தார். அதிசயத்தைப் பார்த்தார். மீண்டும் சிறுமி பாலைக் கொடுத்து விட்டு கண்களை மூடிக் கொண்டு ஆற்று நீர் மீது நடந்து வீட்டிற்கு சென்றாள்.
துறவி நினைத்தார். இதற்காகத்தானே நாற்பது வருடங்களாக முயற்சி செய்தேன். நம் கூறியதைக் கேட்ட அச்சிறுமி நடந்தாளே. நாமும் நடப்போம் என்று ஆற்றிலே கால் வைத்தார். அப்படியே தடுமாறி விழுந்தார். ஏன் என்று யோசியுங்கள்.
ஏனிந்த நிலை? துறவி கூறிய வார்த்தை களில் சிறுமி நம்பிக்கை வைத்தாள்.
ஆதலால் ஆற்றை அவள் எளிதாகக் கடந்தாள். ஆனால் துறவிக்கு அவர் மீது முதலில் நம்பிக்கை இல்லை. பிறகு அவர் கற்ற மந்திரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாத எந்தச் செயலும் முழுமை பெறாது. "உன்னை விட யாரையும் குறைத்து எடைப்போட்டு விடாதே! " துறவி சிறுமியைக் குறைவாக மதிப்பிட்டார். ஆனால் சிறுமி செயலைச்செய்து காண்பித்தாள்.
டால்ஸ்டாய் "நம்பிக்கையே வாழ்க்கையை இயக்கும் சக்தி "என்றார். சாதனையாளர்கள் நாளை சாதனை படைப்பேன் என்ற நம்பிக்கையால் தானே சாதனைகளைப் படைத்தார்கள். ஆனால் கண்களை மூடிக் கொண்டு ஆற்றில் இறங்க வேண்டாம். பெற்றவர்கள் மீது நம் நம்பிக்கையை கண் மூடித்தனமாக வைக்கலாம். ஏனெனில் அவர்கள் நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீது நம்பிக்கை வைத்தால் இல்லறம் இனிக்கும். பெற்றோர்கள் குழந்தை மீதும், குழந்தைகள் பெற்றோர் மீதும் நம்பிக்கை வைத்தால் தான் குடும்பம் பல்கலைக்கழகமாக மாறும்.
நம்பிக்கை வை ! நம்பு !!
நம்பிக்கை தான் வாழ்க்கை !!!
Good
ReplyDelete