சிலேடைச் சிதறல் / Pun-ciletai
சிலேடை
ஒரு வார்த்தை ஆனால் இரு பொருள் தரும் சொற்களைத் தான் சிலேடை (இரட்டுற மொழிதல்) என்பார்கள். சிலேடைப் பாடுவதில் பண்டைய புலவர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர்.
அதிலும் குறிப்பாகச் சிலேடைப் பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர். சிலேடைச் சிதறல் தலைப்பில் நான் தெரிந்துக் கொண்ட சிலேடைச் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அதிலும் குறிப்பாகச் சிலேடைப் பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர். சிலேடைச் சிதறல் தலைப்பில் நான் தெரிந்துக் கொண்ட சிலேடைச் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
மேகத்தை வாங்கியவன்
பண்டைய காலத்தில் குருகுலக் கல்வி முறை நடைமுறையில் இருந்தது. புலவர்கள் இல்லங்கள் தேடி மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். அன்றைய காலகட்டத்தில் குரு தனக்குத் தெரிந்த அனைத்து வித்தைகளையும் மாணவர்களுக்கு (சிஷ்யன்) கற்றுக் கொடுத்தனர்.
ஒரு நாள் குரு தன்னிடம் கல்வி கற்கும் மாணவனின் அறிவுத்திறனைச் சோதிக்க எண்ணி ஒரு மாணவனை அழைத்தார். அவனிடம் காலணாவைக் கொடுத்து மேகம், பசு, மணி இம்மூன்றையும் வாங்கி வா எனச் சொன்னார்.
அந்த மாணவன் சிறிது நேரத்தில் குரு சொன்னதை வாங்கி வந்து மீதிச்சில்லரையும் கொடுத்தான். இதைக் கண்ட அந்தக் குரு பெரிதும் மகிழ்ந்தார். உனக்கு இனி கற்பிக்க தேவையில்லை. நீ உன்னுடைய இல்லம் செல்லலாம் என்று கூறினார்.
அம்மாணவன் அப்படி என்னதான் வாங்கி வந்திருப்பான்?
அவன் வாங்கி வந்தது காராமணிப்பயறு.
கார் + ஆ + மணி = காராமணி.
மேகத்தைக் கார் என்றும் அழைப்பார்கள். ஆ என்றால் பசு. மணி என்றால் மணி. குரு சொன்னதை அம்மாணவன் சிலேடையாகப் புரிந்து கொண்டு வாங்கி வந்தான்.
இந்தச்செய்தி சிலேடைச் சிதறலில் என்னைக் கவர்ந்தது. Read more
தலையைக் குழப்புகிறதா?
இரண்டு புலவர்கள் ஒரு நாள் கானகத்தின் (வனம், காடு) நடுவே நடந்து சென்று கொண்டு இருந்தனர். நண்பகல் வேளை வெயில் வெளுத்தது. புலவருக்குத் தாகம் தாங்க முடியவில்லை. தண்ணீர் தாகத்தைத் தணிக்க தண்ணீர் ஆற்றை அந்தக் கானகத்தில் தேடினார். தண்ணீர் ஆற்றைக் கண்டார். தண்ணீரும் குடித்தார். தண்ணீர் ஆற்றை விட்டு மேலே வரும்போது புலவர் ஒருவர் சொன்னார்...
"முக்காலைக் வைத்து மூவிரண்டைக் கடக்கும்போது ஐந்து தலை நாகம் ஒன்று ஆழக் கடித்து விட்டது".
இதைக் கவனமாகக் கேட்ட புலவர் நகைச் சுவையாகச்சொன்னார்...
"பத்துரதன் புத்திரன், புத்திரனின் மித்திரன், மித்திரனின் சத்துரு, சத்துருவின் பத்தினியின் காலை வாங்கித் தேய்த்து விடு".
முக்கால் - கைத்தடி மற்றும் அவரது இரு கால்களையும் சேர்த்து மொத்தம் மூன்று கால்கள் முக்கால்
மூவிரண்டு - (3 × 2 = 6) ஆறு. ஆற்றைக்கடக்க.
ஐந்து தலை நாகம் - நெருஞ்சி முள்
பத்துரதன் (பத்து - தசம்) - தசரதன்
புத்திரன் - மகன் - ராமன்
மித்திரன் - நண்பன் - அனுமன்
சத்துரு - பகைவன் - வாலி
பத்தினி - மனைவி - தாரை
கைத்தடி ஊன்றி ஆற்றைக் கடக்கையிலே நெருஞ்சி முள் காலில் குத்திவிட்டது என்று முதல் புலவர் கூறினார்.
அதற்கு மற்றொரு புலவர் தசரதனின் மகன் ராமன். ராமனின் நண்பன் அனுமன். அனுமனின் பகைவன் வாலி. வாலியின் மனைவி தாரை. தாரை என்ற வார்த்தையில் உள்ள துணைக்காலை (காலை வாங்கி) நீக்கிவிட்டால் கிடைப்பது தரை.
நெருஞ்சி முள் குத்தினால் காலைத் தரையில் தேய் என்பதையே இரண்டாவது புலவர் நயத்துடன் கூறுகிறார். பண்டைய புலவரின் தமிழ் புலமைக்குச் சிலேடைச் சிதறல் உதரணமாகும்.
ஆனையும் பூனையும் சைவமா? அசைவமா?
புலவர் ஒருவர் தன் நண்பனிடம் "நான் ஆனையும் தின்பேன். பூனையும் தின்பேன். ஆனால் அது இரண்டும் சுத்த சைவம்" என்று கூறினார். இதைக்கேட்ட நண்பருக்குத் திகைப்பு.
புலவர் அப்படி என்னதான் சாப்பிட்டார் என்று நண்பன் கேட்டானாம்.
ஆனெய் = ஆ + நெய் (ஆ - பசு) பசுவின் நெய்
பூனெய் = பூ + நெய் (பூவின் நெய் தேன்)
அவர் பசுவின் நெய்யையும், தேனையும் சாப்பிட்டு வந்தேன் என்பதை இரு பொருள் படச் சிலேடையாகக் கூறினார்.
கடைமடையரும் மடத்தலைவரும்
பண்டையக் காலத்தில் புலவர்கள் அரசரைப் புகழ்ந்து பாடி பரிசாகப் பொருள், பொன் பெற்று வந்தனார். அந்தக் காலத்தில் புலவர்கள் மடத்தில் தாங்குவார்கள். சில நேரங்களில் மடத்தில் அந்தப் பகுதியில் உள்ள புலவர்கள் கலந்துரையாடல் செய்வார்கள்.
ஒரு நாள் புலவர்கள் பலர் ஒரு மடத்தில் கலந்து பேசக் கூடினார்கள். அந்தக் கூட்டத்திற்கு கடைமடை என்ற ஊரைச் சேர்ந்த புலவர் ஒருவர் கடைசியில் வந்தார். அதனைக் கண்ட அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த மடத்தின் தலைவர், "வாரும் கடைமடையரே!" என்று இடக்காக வரவேற்றார்.
இந்தப் புலவர் சொன்ன சிலேடையின் பொருள்கள் மூன்று.
ஒன்று கடைமடை என்னும் ஊரைச் சேர்ந்தவரே.
இரண்டு கடைந்தெடுத்த மடையரே.
மூன்று கடைசியில் வந்த மடையரே என்று பொருள் படும் படி சிலேடையாகக் கூறினார்.
இதனை உணர்ந்த புலவரும் "வந்தேன் மடத்தலைவரே" என்று கிண்டலாகச் சிலேடை கூறினார்.
இந்தப் புலவர் கூறிய சிலேடை சொற்றொடரில் மூன்று பொருள்கள் உள்ளன.
ஒன்று இந்த மடத்திற்குத் தலைவரே. இரண்டு மடத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவர். மூன்றாவது பொருள் மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்று சிலேடையாகக் கூறினார்.
இந்தச் சிலேடைச் சிதறல் தலைப்பில் உங்களுக்குப் பிடித்த சிலேடை வார்த்தையை comments செய்யுங்கள்.
புத்தகம் படிக்க இதைத் தொடுங்கள்.
இந்தச் சிலேடைச் சிதறல் தலைப்பில் உங்களுக்குப் பிடித்த சிலேடை வார்த்தையை comments செய்யுங்கள்.
புத்தகம் படிக்க இதைத் தொடுங்கள்.