H

Saturday 13 June 2020

கோபத்தை வெல்ல Manage Angry

                கோபம் கொள்வது மனித இயல்பு. அன்பாகவும் குணமாகவும் இருப்பவர்கள் கூட கோபிப்பதுமுண்டு. கோபம் கொண்டால் கண்கள் சிவக்கும். நாடித்துடிப்பு அதிகமாகும். இதயம் படபடக்கும். மூச்சு மேல் வாங்கும்.  நமக்கு கோபத்தின் போது கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்தால் எத்தனை அழகு, இறுக்கத்தின் பிடி எப்படி இருக்கும் என உணர வேண்டும். 
          
               மனிதனுக்கு மன அழுத்தம் காரணமாகக் கோபம் பிறக்கிறது. கோபம் எதனால் நமக்கு ஏற்பட்டது என ஒவ்வொருவரும் யோசிப்பதுண்டு. 
கணவனுக்குக்கோபம் மனைவி நம் சொல்வது கேட்பதில்லை. மனைவிக்குக்கோபம் கணவன் நம் சொல்வது கேட்பதில்லை. தகப்பனுக்கு கோபம் தம் பிள்ளைகள் நம் சொல்வது கேட்பதில்லை. மருமகள் மீது மாமியாருக்கு கோபம் வருகிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் கோபம் வரும் காரணம் வேறுபாடும். 
                     கோபம் என்னும் நாகம், பல குட்டிகளுடன் காலைச் சுற்றிக் கொள்ளும். மனிதனை அதிகம் துன்பம் தருவது இரண்டு. ஒன்று கோபம், மற்றொன்று காமம். கோபத்தின் காரணமாக ஒருவன் படாதபாடுபட்டு வருகிறான். 
                          அதிகம் தற்கொலைகள் நடப்பது தீடீரெனத்தோன்றும் கோபம் காரணம். ஒரு உண்மை நிகழ்ச்சி, ஒரு நாள் தாய் தன் மகளிடம் வேலை சொல்லிவிட்டு கடைக்குச்சென்று தக்காளி வாங்கி வந்தாள். மகளிடம் சொல்லப்பட்ட வேலையை முடிக்காமல்  இருந்ததால் அம்மாவிற்கு கோபம் வர மகளைத்திட்டி விட்டாள். பிறகு வெளியே சென்று பூக்களைக் கட்டும் வேலையைத்தாய் செய்தால், ஆனால் வீட்டுக்கு உள்ளே இருந்த மகளுக்குக்கோபம் அதிகமாகி   தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டாள். இது தீடீரென ஏற்பட்ட கோபத்தின் விளைவு. 
  வள்ளுவர் திருக்குறளில் ' சினமென்னும் சேர்ந்தாரைக்கொள்ளி 'என்று விளக்கினார். சேர்ந்தாரைக்கொல்லி என்பது நெருப்பிற்கு ஒரு பெயரும் உண்டு. விறகை பற்றிய நெருப்பானது விறகைக்கொண்டே தன்னைக்காட்டி நிற்கும். விறகு முழுவதும் எரியும்போது தானும் இல்லாமல் போகும். அது போல் உயிரை பற்றிய கோபம், உயிரின் இயல்பாகிய அன்பையும் அறிவையும் அழித்துத்தானும் இல்லாமல் போகும்.
தீயினும் கொடியது சினம். எனவே தான் நண்பர்களையும் சுட்டுப் பொசுக்கி விடுகிறது. கோபம் என்னும் கொடியநகத்தைப்பொறுமை என்னும் மகுடியால் கட்டுப்படுத்த வேண்டும். கோபத்தீயை, அன்பு என்னும் குளிர் நீரால் அணைக்க வேண்டும். 
  இளமையில் இருந்தே அச்சம்,ஆசை,கோபம் முதலான பண்புகள் நம்முள் படியாதிருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.இப்பண்புகள் வெளியே இருந்து வருவது அல்ல. நம்முள் உண்டாகி நம்மையே அழிக்கும் விஷ கிருமிகள். 
உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பது போல் உடன் இருந்தே தொல்லை தரும்.இரும்பிலிருந்து உண்டாகி இரும்பை அழிக்கும் துரு போல நம்மை அழித்துவிடும். 
ஆட்டிறைச்சியோ, மாட்டிறைச்சியோ நெய்யில் வெந்து உணவாகிறது. நெய் தந்த மாடு நெய்யிலேயே அழிகிறது. அது போல மனிதனின் கோபம் மனிதனையே மாய்த்து விடுகிறது. 
அறிவு, அமைதி ஆகியவற்றை கோபம் அழிக்கும்.
துர்வாச முனிவருக்குக் கோபம் வந்தால் சாபம் கொடுப்பார். சாதரண மனிதனுக்கு கோபம் வந்தால், அவனுடைய முகமலர்ச்சியும், அகமலர்ச்சியும் அகன்று விடும். மேலும் மரணம், கொலை, வேலை இழப்பு, ஆர்வமின்மை, உறவுகளில் விரிசல் போன்றவை கோபத்தின் விளைவு. 
குழந்தைக்குக்கோபம் வந்தால் வீட்டை விட்டு ஓடிடுவான். வாடிக்கையாளர்களிடம்  கோபம் கொண்டால் வணிகம் தொய்வுபடும். மாணவனுக்கு ஆசிரியரின் மேல் கோபம் வந்தால் அவன் கல்வியை இழப்பான். மது உண்டவுடன் கோபம் வந்தால் மானம் போகும் செயல்களே  உண்டாகும். அலுவலகத்தில் கோபம் கொண்டால் நட்பு ஏது? 
"கோபம் இருக்கும் இடத்தில் தான்  குணம் இருக்கும் " என்பார்கள்.கோபப் பட்டவன் வெற்றிகரமான பல சாதனை படைத்துள்ளான். எனவே கோபமும் வெற்றிக்குத்தூண்டு கோல் என்று சிலர் கூறலாம். அதற்காக எதற்கெடுத்தாலும் கோபப்பட கூடாது. குழந்தைகளைக் கோபமில்லாச்சூழலில் வளர்க்க வேண்டும். அன்புடன் வாழப்பழக்க வேண்டும். 
குழந்தைகளிடம் நாம் கனிவும், கண்டிப்பும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பு  வேறு,  கோபம் வேறு,  கோபம் வெறுப்பை உண்டாக்கும். கண்டிப்பு ஒழுங்கை உண்டாக்கும்.
கோபம் கொள்வதால் உடல் நலம் பாதிக்கப்படும்.ரத்தக்கொதிப்பு ,மூளைப்பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி,உடல் பருத்தல்,நீரிழிவு, மனநலம் பாதிப்பு போன்ற உடல் நலக்குறைவுஏற்படுகிறது. சினத்தை அன்பால் வெல்ல மெல்ல மெல்ல பழக வேண்டும். 
சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக்கோபம் வரும்.முதலில் அந்தஇடத்தைவிட்டு நகருங்கள்.வீட்டில் இருக்கும் தனி அறையில் பத்து முதல் ஒன்று வரை ரிவர்ஸாக எண்ணவும். இந்த நேரத்தில் உங்கள் மனம் சாந்தம் அடையும். 
யாரையும் யாரால் திருத்த முடியாது.எனவே கோபம் கொண்டோ தண்டனை விதித்தோ நாம் யாரையும் திருத்த முடியாது. பொறுமை, அன்பு, நிதானம் மூலமாகத்தான் திருத்த முடியும். 
தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் பத்து நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதன் மூலம் கோபத்தீயை அணைக்கலாம். 
கோபத்தைக் கொல்வோம்  !!
வாழ்வை வெல்வோம்  !!!