H

Wednesday 15 July 2020

Kamarajar history

      காமராஜர் வரலாறு 

   கல்வி கண் திறந்த வள்ளல் பெருந்தலைவர் காமராஜர் மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தார். தமிழகத்தின் வளர்ச்சி, தமிழக மக்களின் முன்னேற்றம் இவையிரண்டையும் மனதில் வைத்து அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் காமராஜர். தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்த படிக்காத மேதை காமராஜர் வரலாறு படித்து இருப்பீர்கள். இது அதற்கு ஒரு படி மேலே சென்று பல சுவாரஸ்யமான தகவல்களை சேகரித்து தந்துள்ளேன்.

காமராஜர் பிறப்பு:

       மக்களால் பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழகத்தில் தென் மாவட்டமான விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜுலை திங்கள் பதினைந்தாம் நாள் குமாரசாமி,
சிவகாசி அம்மையாரின் அருந்தப்புதல்வனாய் பிறந்தார். இன்று காமராஜர் அவர்களின் 118 ஆவது பிறந்த நாளாகும்(15/07/2020).

காமராஜர் இயற்பெயரும் புனைப்பெயரும் 

        காமராஜரின் தந்தை குமாரசாமி இந்தக் குழந்தை நம் குலத்தெய்வதின் அருளால் பிறந்ததாக எண்ணி அவர்களின் குலதெய்வ மான 'காமட்சி' என்ற பெயரை கர்ம வீரர் காமராஜருக்கு பெயர் சூட்டினார். காமாட்சி என்று அழைக்கப்பட்டவர் எப்படி காமராஜர் எனப்பெயர் மாறியது என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்துள்ளதா?
        காமாட்சி என்று வீட்டில் உள்ளவர்கள் அழைத்து வந்தனர். ஆனால் அவருடைய அம்மா செல்லமாக ராஜா என்ற பெயரில் அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற இயற்பெயர் காமராஜர் என்ற புனை பெயராக மாறி அனைவரும் காமராஜர் என்றே அழைத்தனர். 

காமராஜர் கல்வி வாழ்க்கை:

          கல்வி கண் திறந்த வள்ளல் காமராஜர் அவர்களின் கல்வி வாழ்க்கை எட்டக்கனியாகத் தான் இருந்தது. அதனால்தான் என்னவோ தம் கற்க தடையாக இருந்தக் கல்வியைப் பட்டித் தொட்டி எல்லாம் வழங்க ஏற்பாடுச் செய்தார் கல்வி வள்ளல் காமராஜர். அவர் தொடக்கக் கல்வியை விருதுநகரில்உள்ள சத்திரிய வித்யாசாலா என்ற பள்ளியில் படித்தார்.
        இளமைப் பருவத்தில் இருந்தே பிறரிடம் அன்புடன் பழகுதல், பிறருக்கு உதவும் மனப்பான்மை, பிறரிடம் கனிவுடன் பேசுதல் போன்ற நல்ல பண்புகளைப் பெற்றிருந்தார். 
         காமராஜரின் தந்தை இறந்து விட்டதால் பள்ளிக் கல்வியைத் தொடரமுடியவில்லை. மூன்றாம்  வகுப்பு வரை மட்டுமே படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் தான் தனக்குக் கிடைக்காத கல்வி அனைத்து கிராமங்களிலும் சென்றடையச்செய்த பெருமை பெருந்தலைவர் காமராஜருக்குச்சேரும். 

காமராஜர் அரசியல் ஆரம்பம்:

       பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்ட காமராஜர் அம்மாவின் சொல்லைக்கேட்டு அம்மாவின் சகோதரர் வைத்திருந்த ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடை வேலை முடிந்ததும் மாலையில் பொதுக் கூட்டங்களுக்குச் சென்று தலைவர்கள் பேசும் உரையைக் கேட்பது வழக்கமாக கொண்டு இருந்தார். அந்தக்காலம் விடுதலைப் போராட்டக் காலம்.  1920 ஆம் ஆண்டு தனது பதினாறு வயதில் காங்கிரஸில் இணைந்தார். அன்றே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மனதில் கணக்குப் போட்டுக்கொண்டார்.

காமராஜரின் அரசியல் குரு:

      காமராஜர் கடையில் வேலை பார்த்து கொண்டே மாலைவேளையில் நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார். பலர் உரை நிகழ்த்துவார்கள். காங்கிரஸ் கட்சியின் முதன்மை பேச்சாளர் திரு. சத்தியமூர்த்தி அவர்களின் பேச்சு காமராஜர் மனதில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.

காமராஜரின் சிறைவாசம்:

         காமராஜர்  1930 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த உப்பு சத்தியா கிரகம் போராட்டத்தில் கலந்துக் கொண்டார். இதற்காகக் கல்கத்தாவின் அலிப்பூர் சிறையில் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 
         காமராஜர் குண்டு வெடிப்பு வழக்கில் 1940  ஆம் ஆண்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார். வேலூர் சிறையில் இருந்து கொண்டு விருதுநகர் நகராட்சி தலைவர் தேர்தலில் வெற்றிப பெற்றார்.
      மூன்றாவது முறையாக காமராஜர்  1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். 
     இவ்வாறு காமராஜர் மூன்று முறை மக்களுக்காகச் சிறைச்சென்று ஒன்பதாண்டுகள் சிறையில் கழித்தார். 

காமராஜரின் கல்விப்புரட்சி:

                      பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பெயர் முன் எழுத்து கு என்றால் அடுத்து வருகிற எழுத்து கல்விதான். காமராஜர் அவர்களையும் கல்வியையும் இரண்டாக பிரித்து பார்க்க முடியாது. தொடக்கக் கல்வியில் மூன்றாம் வகுப்பினை முடித்தவர் என்பார்கள். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது நமக்கு எட்டாத கல்வி தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கோயில் இல்லாத ஊராக இருந்தாலும் பரவாயில்லை; பள்ளிகள் இல்லாத ஊர் இருக்கக்கூடாது என்று கிராமங்கள் தோறும் பள்ளிகளை உருவாக்கினார்.
                        ஒரு மைல் தொலைவிற்குள் ஒரு தொடக்கப்பள்ளியும், மூன்று மைல் தொலைவிற்குள் ஒரு நடுநிலைப் பள்ளியும், ஐந்து  மைல் தொலைவிற்குள் ஒரு  உயர்நிலைப் பள்ளியையும் உருவாக்கினார். ஏழைக் குழந்தைகளுக்காகப் பள்ளிகளைத் தொடங்கி கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர்.
                                அவருடைய 1954_1963 ஒன்பது ஆண்டுகளில்தான் இன்று இருகின்ற பெரும்பாலான பள்ளிகள் தொடங்கப்பட்டது.  குலக்கல்வித்திட்டத்தால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத்திறந்தார். கிராமங்கள் தோறும் மேலே உள்ள விகிதங்கள்படி 17,000 மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். பள்ளிகள் திறந்தால் போதுமா கல்விச் சிறப்பாகச் சென்றடைய கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் இருநூறு நாள்கள் வேலை நாள்களாகச் செயல்பட அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். இவ்வாறு கல்வியில் செய்த புரட்சி கர்மவீரர் காமராஜரையே சேரும்.

  காமராஜரின் மதிய உணவுத்திட்டம்:

       பள்ளிகள் பல திறக்கப்பட்டன. காமராஜர் முதல்வராக இருந்தபோது தனது அமைச்சரவையைக் கூட்டி பள்ளிகளின் கல்வியின் நிலை குறித்து ஆலோசனை செய்தார். மாணவர்களின் வருகை மற்றும் தேர்ச்சியை அதிகரிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
              ஆசிரியர்கள் கல்வியறிவு ஊட்டுகிறார்கள். ஆனால் பட்டினி பசியுடன் பிள்ளைகள் எப்படி படிப்பார்கள் என்று எண்ணி இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் கர்மவீரர் காமராஜர்.

காமராஜரின் பள்ளிச் சீருடைத்திட்டம்:

         காமராஜர் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடுகளை நீக்க  பள்ளிச் சீருடைத் திட்டம் கொண்டு வந்தார். அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடையை வழங்கியவர் கல்விக்கண் திறந்த காமராஜர் தான். 

காமராஜரும் ஆசிரியர் சங்கங்களும்:

                                  காமராஜர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி 5 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்க வேண்டி இருந்தது. இந்த தகவலை ஆசிரியர் சங்கங்கள் முதலமைச்சர் அவர்களிடம் கொண்டு சென்றபோது அந்நாள் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்களை வரவழைத்து நாம் ஆட்சிக்கு வந்ததும் வாத்திமாரை  வெளியே அனுப்புறதுக்குத்தான் வந்தமா?
                    அந்த விகிதாச்சாரம் எல்லாம் எனக்கு தெரியாது. அத்தனை பேரும் வெளியே செல்லாமல் பணியாற்ற வேண்டும் அரசாணை போட்டுக் கொடுங்கள் என்றார்.  முதலமைச்சர் காமராஜர் அவர்களுடைய ஆணையின்படி உடன் ஆசிரியர்கள் பாதுகாக்கப் பட்டார்கள்.  அப்போது ஆசிரியர் சங்கங்களைப் பார்த்து ஏழைப் பிள்ளைகளை உங்களை நம்பி ஒப்படைக்கிறோம். துரோகம் பண்ணிடாதீங்க என்று அவருக்கே உரிய பாணியில் ஆசிரியர் சமுதாயத்தின் இதயத்தைத் தொட்டு உணர்த்தியிருக்கிறார்.

காமராஜரைப் புகழ்ந்த கண்ணதாசன்:

                    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவரது கவிதையில் கிராமங்கள் தோறும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று பள்ளிக் கட்டிடச் சுவரினைத் தட்டினால் காமராஜர் காமராஜர் என்றல்லவா எதிரொலிக்கும் என்றார். காமராஜர் செய்த கல்விப்புரட்சியை கவிதையில் வடித்தார் கண்ணதாசன்.

தமிழக முதலமைச்சர் பதவியில் காமராஜர்:

        தமிழக அரசியலில் அப்போது முதல்வர் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார் என அப்போதைய முதல்வர் ராஜாஜி அவர்கள் பதவி விலகினார். ராஜாஜி சார்பில் சுப்பிரமணியம், காமராஜர் என இரு அணிகளாகப் பிரிந்து சட்டசபையில் அமைச்சர்கள் வாக்கெடுப்பு நடந்தது. இதில் காமராஜர் பெரும்பான்மை பெற்று 1954 இல் தமிழக முதல்வர் ஆனார். 
                     அரசியல் வாழ்வில் 1954 - 1963 வரை  ஒன்பது ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர்.

     காங்கிரஸில் காமராஜரின் தொண்டு: 

                5 ஆண்டுகாலம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் இறந்தபோது நான்கு வேட்டி சட்டையை தவிர வேறு எந்த சொத்து சுகத்தையும் அவர் சேர்த்து வைத்துச் செல்லவில்லை.  பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் வகுப்பு வரை படித்த காமராஜர் அவர்களை தேர்ந்தெடுத் தார்கள் என்றால் அவரின் எளிமை, தூய்மை, நேர்மை, தலைமைப் பண்புக்கு கிடைத்த வெற்றியாகும். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய நாடே அவரின் வெளிப்படைத் தன்மையினை உணர்ந்திருந்தார்கள்.
              அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வடமாநிலங்களில் காமராஜர் அவர்களின் படத்தை போட்டு "A man without any property is our Congress leader vote for Congress"என்று சுவரொட்டி அடித்து வடமாநிலங்களில் ஒட்டியிருந்தார்கள் என்பது தேர்தல் வரலாற்றில் இடம்பெற்றிருந்த நிகழ்வாகும்.

காமராஜரும் குலக்கல்வித் திட்டம் ஒழிப்பும்:

                    குலக்கல்வியையும் ராஜாஜி அவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.  தமிழகத்தில் குலக்கல்வித் திட்டத்தை அறவே அப்புறப்படுத்திய பெருமைக்குரியவர்கள் யார் என்றால் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் இவர்களுக்கே அந்த அழியாப் புகழ் நிலைத்து நிற்கும்.

பெரியாருக்காக கப்பலையே நிறுத்தியவர் காமராஜர்.

                           தந்தை பெரியார் அவர்கள் குடும்பத்தார் ஐந்து பேருடன் சிங்கப்பூர், மலேசியா செல்ல வேண்டும் பாஸ்போர்ட், விசா பெற்று விட்டார்கள். கப்பல் புறப்படுகிற நேரத்திற்கு பெரியாரால் செல்ல முடியாத நிலை என்பது பெரியார் அவர்களுக்கும் தெரியாத ரகசியம். காமராஜர் அவர்களிடம் இந்த ரகசியத்தை சொல்லி இருக்கிறார்கள்.
                       1956இல் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இந்த நிகழ்வு நடைபெற்றது. வந்தவர்களிடம் காமராஜர் அவர்கள் பெரியார் எந்தத்தேதியில் கப்பலுக்குச் செல்ல வேண்டும் எனக்கேட்டிருக்கிறார். ஒருநாள் காலதாமதமாகச்செல்ல வேண்டி வரும் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த தேதிக்குப் புறப்பட்டு வாருங்கள் எனச் சொல்லிவிட்டார். உடன் டெல்லிக்கு தொடர்புகொண்டு கப்பலை ஒருநாள் நிறுத்தச் சொல்லி இருக்கிறார். இது பெரியாருக்குத் தெரிய வேண்டாம் எனக் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். பெரியார் அவர்களுக்குத் தெரிந்தால் ஒத்துக் கொள்ளவே மாட்டார் என்றும் சொல்லி இருக்கிறார்.
                             காமராஜர் அவர்கள் சொன்னபடியே கப்பல் ஒரு நாள் கடலில் நிறுத்தப்பட்டிருந்தது. பெரியார் அவர்கள் அவரது குடும்பத்தார்களுடன் கப்பலில் ஏறி அமர்ந்த பிறகுதான் கப்பல் புறப்படுவதற்கான அனுமதி டெல்லியிலிருந்து கிடைத்திருக் கிறது. இந்த நிகழ்வால் தான் பெரியாருக்காக கப்பலையே நிறுத்தியவர்  காமராஜர் என்ற பெயரும், பெருமையும்  அவருக்கு உண்டு என்பார்கள்.

காமராஜரின் நீர்ப்பாசனத் திட்டங்கள்:

      தமிழக முதல்வராகப்பதவியேற்ற பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் ஏழ்மையை அகற்ற வேளாண்மை அவசியம் என நம்பினார். ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம் கொண்டு வந்தார்.
       திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை திட்டம். மதுரை மாவட்டத்தில் வைகை அணை திட்டம், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் மணிமுத்தாறு அணை திட்டம், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை திட்டம், சேலம் மேட்டூர் அணை திட்டம்,  கிருஷ்ணகிரி அமராவதி திட்டம் எனப் பல்வேறு நீர் தேக்கங்கள் கட்டி வேளாண்மைத் தொழிலில் புரட்சி செய்தார். 

காமராஜரின் தொழிற்புரட்சி:

           காமராஜர் கல்வியில் மட்டும் புரட்சி செய்யவில்லை.  மக்கள் ஏழ்மையைப்போக்க  பல்வேறு வேலை வாய்ப்பு பெருக்கத்திட்டம் தீட்டினார். பல்வேறு இடங்களில் தொழிற் சாலைகள் நிறுவினார். அவற்றில் சிலவற்றைப் பட்டியல் இடுகிறேன்.  
     திருச்சி BHEL நிறுவனம் 
     கிண்டி டெலிபிரிண்டர்
     மேட்டூர் காகித ஆலை 
      சேலம் ஸ்டீல் நிறுவனம் 
      ஊட்டி கச்சா ஃபிலிம் நிறுவனம் 
      பெரம்பலூர் ரயில் பெட்டி நிறுவனம் 
       நெய்வேலி நிலக்கரி உற்பத்தி நிறுவனம் 

காமராஜர் அழைக்கப்படும்  பெயர்கள்:

     கல்விக் கூடங்களே நம் அறிவுக்கண் திறக்கும் ஆலயங்கள். அந்தக்   கல்விக்காகப் புதியப்பள்ளிகளைத் திறந்ததால் கல்விக்கண் திறந்த காமராஜர் எனப்போற்றப்பட்டார்.
     கர்மவீரர் காமராஜர் 
       படிக்காத மேதை காமராஜர் 
       பெருந்தலைவர் காமராஜர் 
       தென்னாட்டு காந்தி காமராஜர் 
       King maker kamaraj

பதவிகளை உதறிய காமராஜர்:

        அரசியலில் இருந்து முதியவர்கள் விலகி இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற தாரகமந்திரத்தை முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் காமராஜர். பல்வேறு பதவிகள் அவரைத் தேடி வந்த போதும் அந்தப்பதவியை உதறித்த்தள்ளி விட்டு மக்களுக்குச் சேவை செய்யும் கட்சிப் பணிக்குத் திரும்பினார். 

காமராஜரின் இறப்பு:

     முதலமைச்சர் பதவி வகித்த தலைவர்களில் இவர் ஒருவரே கடைசி வரை தனக்கென்று சொந்தவீடு வாங்காமல் வாடகை வீட்டில் வாழ்ந்த பெருமை பெருந்தலைவர் காமராஜரையேச் சாரும். கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் சேமிக்காத சிறந்த தலைவர் காமராஜர் தான். 
        தோன்றுக புகழோடு என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தோன்றிய பெருந்தலைவர் காமராஜர் இந்தியா மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற கர்மவீரர் காமராஜர் தனது எழுபத்திரண்டு அகவையில்  1975 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் மண்ணுலகம் விட்டு இன்னுயிர் ஈந்தார்.

காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள்:

                       பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பிறந்தநாளான ஜூலை 15 ஆம் நாளினை மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடு மாறு கேட்டுக்கொண்டு ஆணை வழங்கினார். பொதுவாக காமராஜர் என்றுச் சொன்னால் அவருக்கு மக்கள் தந்த மகத்தான முனைவர் பட்டம் கல்விக்கண் திறந்த காமராஜர் என்பதுதான். காமராஜர் கல்வியில் செய்த புரட்சி வரலாற்றில் நீங்க இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு அவருடைய  118 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக வட்டாரக்கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்களில் கொண்டாடுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

காமராஜரின் மணிமண்டபம்:

       காமராஜரின் பிறந்த ஊரான விருதுநகரில் நுழைவாயில் அருகே காமராஜர் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த காமராஜர் மணிமண்டபம் அவருடைய  117 பிறந்தநாள் கடந்தாண்டு  2019 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் பதினைந்தாம் நாள் தமிழக முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் சென்றால் காமராஜரின் மணிமண்டபத்தைப் பார்த்து ரசியுங்கள். 
     காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழா வீடியோபதிவு. 

காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள்:

   
 இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம். இது போன்ற பலப்புத்தங்கள் உள்ளது. சென்று படிங்க.
மேலும் பல அரியத்தகவல் படிக்க தொடுங்கRead more

No comments:

Post a Comment

Super useful ideas thank you reading