H
Showing posts with label தமிழ் கதைகள். Show all posts
Showing posts with label தமிழ் கதைகள். Show all posts

Saturday 25 July 2020

சிலேடைச் சிதறல் / ciletai-Pun-siledai

சிலேடைச் சிதறல் / Pun-ciletai

சிலேடை 

           ஒரு வார்த்தை ஆனால் இரு பொருள் தரும்  சொற்களைத் தான் சிலேடை (இரட்டுற மொழிதல்) என்பார்கள். சிலேடைப் பாடுவதில் பண்டைய புலவர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர்.
                 அதிலும் குறிப்பாகச் சிலேடைப் பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர். சிலேடைச் சிதறல் தலைப்பில் நான் தெரிந்துக் கொண்ட சிலேடைச் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

மேகத்தை வாங்கியவன்

       பண்டைய காலத்தில் குருகுலக் கல்வி முறை நடைமுறையில் இருந்தது. புலவர்கள் இல்லங்கள் தேடி மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். அன்றைய காலகட்டத்தில் குரு தனக்குத் தெரிந்த அனைத்து வித்தைகளையும் மாணவர்களுக்கு  (சிஷ்யன்) கற்றுக் கொடுத்தனர்.
          ஒரு நாள் குரு தன்னிடம் கல்வி கற்கும் மாணவனின் அறிவுத்திறனைச் சோதிக்க எண்ணி ஒரு மாணவனை அழைத்தார். அவனிடம் காலணாவைக் கொடுத்து மேகம், பசு, மணி இம்மூன்றையும் வாங்கி வா எனச் சொன்னார்.
         அந்த மாணவன் சிறிது நேரத்தில் குரு சொன்னதை வாங்கி வந்து மீதிச்சில்லரையும் கொடுத்தான். இதைக் கண்ட அந்தக் குரு பெரிதும் மகிழ்ந்தார். உனக்கு இனி கற்பிக்க தேவையில்லை. நீ உன்னுடைய இல்லம் செல்லலாம் என்று கூறினார். 
      அம்மாணவன் அப்படி என்னதான் வாங்கி வந்திருப்பான்?
     அவன் வாங்கி வந்தது காராமணிப்பயறு.
கார் + ஆ + மணி = காராமணி.
      மேகத்தைக் கார் என்றும் அழைப்பார்கள். ஆ என்றால் பசு. மணி என்றால் மணி. குரு சொன்னதை அம்மாணவன் சிலேடையாகப் புரிந்து கொண்டு வாங்கி வந்தான். 
       இந்தச்செய்தி சிலேடைச் சிதறலில் என்னைக் கவர்ந்தது. Read more

 தலையைக் குழப்புகிறதா?

           இரண்டு புலவர்கள் ஒரு நாள் கானகத்தின்  (வனம், காடு) நடுவே நடந்து சென்று கொண்டு இருந்தனர்.  நண்பகல் வேளை வெயில் வெளுத்தது. புலவருக்குத் தாகம் தாங்க முடியவில்லை. தண்ணீர் தாகத்தைத் தணிக்க தண்ணீர் ஆற்றை  அந்தக் கானகத்தில் தேடினார். தண்ணீர் ஆற்றைக் கண்டார். தண்ணீரும் குடித்தார். தண்ணீர் ஆற்றை  விட்டு மேலே வரும்போது புலவர் ஒருவர் சொன்னார்...
          "முக்காலைக் வைத்து  மூவிரண்டைக் கடக்கும்போது  ஐந்து தலை நாகம் ஒன்று ஆழக் கடித்து விட்டது".
     இதைக் கவனமாகக் கேட்ட புலவர் நகைச் சுவையாகச்சொன்னார்...
         "பத்துரதன் புத்திரன், புத்திரனின் மித்திரன், மித்திரனின் சத்துரு, சத்துருவின் பத்தினியின் காலை வாங்கித் தேய்த்து விடு".
  என்ன உங்கள் தலையைக் குழப்புகிறதா?
        முக்கால் - கைத்தடி மற்றும் அவரது இரு கால்களையும் சேர்த்து மொத்தம் மூன்று கால்கள் முக்கால் 
      மூவிரண்டு - (3 × 2 = 6) ஆறு. ஆற்றைக்கடக்க.
        ஐந்து தலை நாகம் - நெருஞ்சி முள் 
       பத்துரதன்  (பத்து - தசம்) - தசரதன் 
      புத்திரன் - மகன் - ராமன் 
       மித்திரன் - நண்பன் - அனுமன் 
       சத்துரு - பகைவன் - வாலி 
       பத்தினி - மனைவி - தாரை 
    கைத்தடி ஊன்றி ஆற்றைக் கடக்கையிலே நெருஞ்சி முள் காலில் குத்திவிட்டது என்று முதல் புலவர் கூறினார். 
        அதற்கு மற்றொரு புலவர் தசரதனின் மகன் ராமன். ராமனின் நண்பன் அனுமன். அனுமனின் பகைவன் வாலி. வாலியின் மனைவி தாரை. தாரை என்ற வார்த்தையில் உள்ள துணைக்காலை  (காலை வாங்கி) நீக்கிவிட்டால் கிடைப்பது தரை. 
        நெருஞ்சி முள் குத்தினால் காலைத் தரையில் தேய் என்பதையே இரண்டாவது புலவர் நயத்துடன் கூறுகிறார். பண்டைய புலவரின் தமிழ் புலமைக்குச் சிலேடைச் சிதறல் உதரணமாகும்.

ஆனையும் பூனையும் சைவமா? அசைவமா?

         புலவர் ஒருவர் தன் நண்பனிடம் "நான் ஆனையும் தின்பேன். பூனையும் தின்பேன். ஆனால் அது இரண்டும் சுத்த சைவம்" என்று கூறினார். இதைக்கேட்ட நண்பருக்குத் திகைப்பு.
    புலவர் அப்படி என்னதான் சாப்பிட்டார் என்று நண்பன் கேட்டானாம். 
     ஆனெய் = ஆ + நெய்  (ஆ - பசு) பசுவின் நெய் 
      பூனெய் = பூ + நெய் (பூவின் நெய் தேன்)
            அவர் பசுவின் நெய்யையும், தேனையும் சாப்பிட்டு வந்தேன் என்பதை இரு பொருள் படச்  சிலேடையாகக் கூறினார். 

கடைமடையரும் மடத்தலைவரும்

      பண்டையக் காலத்தில் புலவர்கள் அரசரைப் புகழ்ந்து பாடி பரிசாகப் பொருள், பொன் பெற்று வந்தனார். அந்தக் காலத்தில் புலவர்கள் மடத்தில் தாங்குவார்கள். சில நேரங்களில் மடத்தில் அந்தப் பகுதியில் உள்ள புலவர்கள் கலந்துரையாடல் செய்வார்கள். 
    ஒரு நாள் புலவர்கள் பலர்  ஒரு மடத்தில் கலந்து பேசக் கூடினார்கள். அந்தக் கூட்டத்திற்கு கடைமடை என்ற ஊரைச் சேர்ந்த புலவர் ஒருவர் கடைசியில் வந்தார். அதனைக் கண்ட அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த மடத்தின் தலைவர், "வாரும் கடைமடையரே!" என்று இடக்காக வரவேற்றார்.
      இந்தப் புலவர் சொன்ன சிலேடையின் பொருள்கள் மூன்று. 
    ஒன்று கடைமடை என்னும் ஊரைச் சேர்ந்தவரே.
   இரண்டு கடைந்தெடுத்த மடையரே. 
   மூன்று கடைசியில் வந்த மடையரே என்று பொருள் படும் படி சிலேடையாகக் கூறினார். 
       இதனை உணர்ந்த புலவரும் "வந்தேன் மடத்தலைவரே" என்று கிண்டலாகச் சிலேடை கூறினார். 
        இந்தப் புலவர் கூறிய சிலேடை சொற்றொடரில் மூன்று பொருள்கள் உள்ளன.
     ஒன்று இந்த மடத்திற்குத் தலைவரே. இரண்டு மடத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவர். மூன்றாவது பொருள் மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்று சிலேடையாகக் கூறினார்.
      இந்தச் சிலேடைச் சிதறல் தலைப்பில் உங்களுக்குப் பிடித்த சிலேடை வார்த்தையை comments செய்யுங்கள்.
    புத்தகம் படிக்க இதைத் தொடுங்கள். 

Wednesday 24 June 2020

சாணக்கியர் கதை Tamil story

                          பிறருக்கு என்று ஒதுக்கப்பட்ட உடமைகளைத் தனக்கெனப் பயன்படுத்தினால் 'திருடனுக்கு ஒப்பானவன்' என்ற தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்தவர் சாணக்கியர். அவர் வைத்திருந்த ஒட்டைக்கம்பளி கதை தான் இது. மிகவும் சுவாரசியமான கதை. இக்கதையில் திருடனும் எப்படி திருந்துகிறான் என்று பார்போம்.

             சாணக்கியர் மற்றவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என ஒரு நிகழ்வினை நிகழ்த்தினார். ஒரு சமயம் நாட்டில் ஏழைகள் குளிரால் மிகவு‌ம் துன்பப்பட்டு வந்தனர். ஏழைகள் அனைவருக்கும் கம்பளி போர்வைகள் கொடுக்கவேண்டுமென சாணக்கியர் சந்திரகுப்த பேரரசரிடம் சொன்னார். பேரரசரும் ஒப்புதல் அளித்து ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய போர்வைகள் அனைத்தையும் சாணக்கியர் குடிசை வீட்டில் வைத்து வழங்குமாறு கூறிவிட்டார். 
               நாளை ஏழைகளுக்கு போர்வை வழங்க சந்திரகுப்த பேரரசர் உத்தர விட்டுள்ளார். போர்வைகள் அனைத்தும் சாணக்கியர் வீட்டில் வைத்து வழங்கப்படும் என்று தண்டரா போட்டுச்சொன்னார்கள். இதைக்கவனமாக கேட்ட திருடர்கள் இன்று இரவு சாணக்கியர் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார்கள். திருடன் ஒருவன் கம்பளி போர்வைகளைக் களவாடிக் கொண்டு வந்து வேறு ஊரில் விற்று பணக்காரர்களாகி விடுவோம் என்று கூறினான். 
            அன்று இரவு அமாவாசை நிலவே வானில் தெரியவில்லை. பயங்கரமான இருட்டு. திருடர்கள் திட்டமிட்டபடி சாணக்கியர் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அனைவருக்கும் ஒரே வியப்பாக இருந்தது. அங்கு ஒரு பக்கத்தில் புதிய கம்பளி போர்வைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் சாணக்கியர் கிழிந்து போன கம்பளி போர்வையை போர்த்தி படுத்திருந்தார். அதைக் கண்ட திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 
              திருடர்களின் தலைவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்னடா இது. புதுக்கம்பளிகள் நூற்றுக்கணக்கான அடிக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாணக்கியரோ கிழிந்த பழைய போர்வையை போர்த்திக் கொண்டு படுத்து இருக்கிறார். என்னகாரணம் என்றுதிருடர்களின் தலைவர்  யோசித்தான். தன் மனதில் இருக்கும் சந்தேகத்தைச் சாணக்கியரிடமே கேட்டு விடுவதென முடிவு செய்தான். 
       சாணக்கியர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். உறங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பி...தனது சந்தேகத்தைக் கேட்டான். நாங்களாவது கிழிந்து போன கம்பளிகளை வைத்துள்ளேன். மற்ற ஏழைகளோ கிழிந்த கம்பளி கூட இல்லாமல் இருக்கிறார்கள். இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் பேரரசர் இந்தக்கம்பளிகளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அந்த ஏழைகள் இந்தப்புதுக்கம்பளியின் சொந்தக்காரர்கள். அதை எடுத்து நானும் எங்கள் குடும்பத்தினரும் போர்த்திக்கொண்டால்...நாங்களும் திருடர்கள் தானே...அதனால் தான் நான் எடுத்துக் கொள்ளவில்லை என்றார். 
           சாணக்கியர் சொன்ன வார்த்தைகள் திருடர்களின் மனத்தினை நெகிழச்செய்தது. "அய்யா! எங்களை மன்னித்து விடுங்கள் ...கம்பளிகளை திருட வந்த எங்க கண்களையெல்லாம் திறந்து விட்டீர்,இனி திருடவே மாட்டோம்... உழைத்து உடமைகளைப்பெறுவோம்"என்று சொல்லிவிட்டு சென்றனர். 
         பிறருக்கு நீ சொல்லும் அறிவுரையை நீயே பின்பற்றினால் நீ வாழ்வில் வெற்றியைச் சுலபமாக அடையலாம் என்ற வார்த்தையைப் பின்பற்றி வாழ்ந்தவர் சாணக்கியர். 

Monday 15 June 2020

வள்ளலார் கதை / Vallalar story

            வள்ளலார் கதை/ Vallalar story

                  "அருட்பெருஞ்ஜோதி தனிபெறும் கருணை" என்ற வாசகத்தை உலக அறிய செய்த உத்தமர் வள்ளலார் வாழ்ந்தக் காலத்தில் நடந்தச் சம்பவம்பற்றி 'வள்ளலார் கதை' என்ற தலைப்பில் வாசகர்களுக்குப்பதிவு செய்வதில் எனக்கு மற்ற மகிழ்ச்சி. இது என் மனம் கவர்ந்த பதிவு.

திருடனுக்கு கடுக்கன் கொடுத்தவர்:

                         திருடனை நாம் பார்த்தாலே முதலில் பயம் வந்து விடும். கைகள் உதறும். கால்கள் இழுத்து தள்ளும். என்ன செய்வது என்று யோசிக்க மூளை சிறிது நேரம் தடுமாறும். திருடன் நம்மைக்கத்தி வைத்துக் குத்தி விடுவனோ, என்ற பயமும் பற்றி விடும். 
                                             அப்படி  இருக்க திருடனுக்குக் கடுக்கன் கழற்றி கொடுத்தவர் யார்? திருடனுக்கும்  திருந்த வழிச்சொல்லி திருடனைத்திருத்தியவர் யார்? யோசியுங்கள் நண்பர்களே,
                                  முன்பு ஒரு காலத்தில் நடந்தச் சம்பவத்தைக் கதை வடிவில் உங்களுக்காகப் பதிவு செய்துள்ளேன்.

வள்ளலாரை மனிதன் என்று சொன்னவன்:

          தெருவில் போவோர் வருவோரை யெல்லம். அதோ போகிறது கழுதை, இதோ வருகிறது நாய் என்று வந்த படியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் ஒரு பித்தன்.
           அந்த வழியாக ராமலிங்க அடிகளார் என்ற வள்ளலார் வந்துக் கொண்டிருந்தார். 
அதைக் கண்ட சிலர் அவர்மீது அக்கறைக் கொண்டு, "சுவாமி! அந்தப்பக்கம் போகாதீங்க...!அங்கு இருக்கிற பித்தன் ஒருவன் போவோர் வருவோரை வாய்க்கு வந்தபடி பேசித்திட்டிக் கொண்டிருக்கிறான். "உங்களையும் என்று சொல்லித்தடுக்கப் பார்த்தனர். 
                                                    என்னை எப்படி வேண்டுமானாலும்  திட்டட்டும். அதைப் பற்றி எனக்குக்கவலை இல்லை. என்மீது அக்கறை கொண்ட நீங்களும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து நடந்தார். 
                         வள்ளலாரைப் பார்த்தவுடன், "இதோவருகிறார் மனிதன் " என்றுச் சொன்ன பித்தன் திண்ணையிலிருந்து எழுந்து நிர்வாணத்துடன் ஓட ஆயத்தமானான். 
வள்ளலார் அவனுக்கு ஒரு துணியைக் கொடுத்து உடுத்திக் கொண்டு போகும்படி செய்தார். 

வள்ளலாரும் திருடனும்:

            அப்படிப்பட்ட வள்ளலார் ஒரு நாள் இரவு. திருவொற்றியூரில் உள்ள கோவில். திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். ஒரேபக்கத்தில் ஒருக்களித்துப்படுத்திருந்தால் ஒரு பக்கக் காதில் அணிந்திருந்த கடுக்கன் மின்னிக் கொண்டிருந்தது. 
                  அந்த வழியே வந்த திருடனுக்கு 'அது' பளிச்சென்று தெரிந்தது. அக்கடுக்கனைக் கழற்றினான். அதை வள்ளலார் உணர்ந்தார். ஆனால் கத்தவோ, கதறவோ, எதிர்ப்புக்குரல் கொடுக்கவோ இல்லை, அமைதியாயிருந்தார். 
              "நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் திருப்பிக்காட்ட வேண்டும்" என்று இயேசு பிரான் சொன்னது போன்று.
ஒரு கடுக்கனைக் கழற்றியத் திருடனுக்கு மறுக் கடுக்கனையும் கழற்றிக் கொடுக்க வேண்டும் என்ற பாணியில் திரும்பி மறு புறத்தில் ஒருக்களித்துப்படுத்தார். 

திருடனைத்திருத்திய வள்ளலார்:

                  திருடன்  யோசிக்க ஆரம்பித்தான். சாதாரண மனிதனாக இருந்தால் இந்நேரம் 'திருடன், திருடன்' எனக் கத்தி ஊரைக் கூட்டி நம்மைப் பிடிக்கச் செய்து அடி உதைகளைக் கொடுக்கச் செய்திருப்பாரே.  இவரோஒரு கடுக்கனுக்குப்பதிலாக இரு கடுக்கன்களையும் கழற்றிக் கொடுத்த தெய்வம். 
               இத்தகைய தெய்வத்திடம் மன்னிப்பு கேட்பதேயன்றி, வேறு வழியில்லை என்று மனம் திருந்தினான். சுவாமி, வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டிச் செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிக் காலில் விழுந்தான். 
           

      வள்ளலார் திருடனுக்குச் சொன்ன உபதேசம்:

             

                     எழுந்திரு தம்பி! நீ ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்ணாசை, மண்ணாசை, பொருளாசை வென்ற துறவிக்குப்பொன்னாசை எதற்கு?  பொன்நகைகளுக்கு பதிலாகப் புன்னகை மட்டும் தானே தேவை! என்பதனை புரிய வைத்தவன் நீ ஆதலால் இந்தக் கடுக்கனையும்நீயே எடுத்துக்கொள் என்றால் வள்ளலார். 

வள்ளலாரும்  கர்ணனின் கொடை:

                 இருந்தவைகளையெல்லாம் அள்ளி அள்ளிக்கொடுத்த வள்ளல் கர்ணன் கடைசியில் குண்டலங்களையும் கொடுத்ததுபோல வள்ளலாரும் கடுக்கன்களையும் கழற்றிக் கொடுத்தார். "எதைக்கொண்டு வந்தோம் இழப்பதற்கு நீ எதை இழந்தாலும் இன்னும் எதிர் காலம் இருக்கிறது." என்றத் தன்னம்பிக்கை உடன் வேறு பதிவில் சந்திப்போம்!!!
       வள்ளலார் பற்றிப் படிக்க இதைத் தொட்டுப்படிக்கலாம்
     
 இந்தப்படத்தின் மீது தொட்டுச்சரிபார்க்கலாம்.

Wednesday 10 June 2020

பாரி வள்ளல் / Parivallal

                   பாரி வள்ளல் 

கடையேழு வள்ளல்களுள் ஒருவர்

                 கடையேழு வள்ளல்களுள் ஒருவர், "பாரி வள்ளல்". ஆதி மொழி  தமிழ், முதல் மொழிதமிழ், செம்மை மொழிதமிழ் என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. 
             இந்த சங்க இலக்கியத்தில் கடையேழு வள்ளல்களுள் பாரி வள்ளல் என்ற உடனே நாம் நினைவிற்கு வரும் முல்லைக்குத் தேர் கொடுத்தப்பாரி. 

பறம்பு  மலையை ஆட்சி செய்த மன்னர் பாரி. 

பறம்புமலை

               பறம்புநாடு பாண்டிய நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ளது. இந்த நாட்டில் முந்நூறு ஊர்கள் இருந்தது. 
                 இங்குள்ள மலை பறம்புநாட்டில் உள்ளதால் "பறம்புமலை "எனழைக்கப்பட்டது. இஃது இப்பொழுது "பிரான் மலை"என்று வழங்கப்படுகிறது. 
பறம்புமலையின் சிறப்பு

              பறம்புமலையில் சந்தனம், வேங்கை முதலிய மரங்கள் மிகுந்திருந்தன. ஆதலால் இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் விறகுக்காச் சந்தனக் கட்டைகளையே பயன்படுத்தினர். இங்கு பல இனிய நீரை தரும் அருவிகள் இருந்தது. மலையில் தேன், பலா, மூங்கில், அரிசி முதலியன உழவரின் முயற்சியில் விளைந்தன. 

வேள்   _பாரி நாட்டின் சிறப்பு 

              மூந்நூறு ஊர்களையும் சேர்த்து பறம்புமலையை தலைநகரமாக கொண்டு ஆண்டவன் பாரி என்னும் குறு நில மன்னர். இவர் கடையேழு வள்ளல்களுள் ஒருவர்.
                     பாரி வேளிர் குலத்தலைவன். ஆகவே இவர் வேள்பாரி எனப்பட்டான். 'வேளிர்' என்பவர் முடியுடைய மன்னரிடத்துப் பெண் கொடுத்துப்பெண் கொள்ளும் தன்மை பெற்றவர்கள். பாரி தன் கருத்தொத்த  மங்கை நல்லாளை மணந்து அவளுடன் சேர்ந்து இன்ப வாழ்வு வாழ்ந்து வந்தார். 
                              பாரி சிறந்த கல்வி அறிவு பெற்றவன். அவைக்களத்தில் புலவர் பெருமக்களைப் பெற்றிருந்தான். புலவர் பெருமக்கள் உடன் பேசிப்பேசி பல கருத்துகளை அறிவதே தனக்குரிய பேரின்பமெனக் கொண்டான்.

கபிலர்

             கபிலர் பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர்; அந்தண மரபினர்; தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றவர். தம் வயொத்தப்புலவரால் பாரட்டப்பெற்றவர்

                    பாரியின் அரசவையில் புலவராகக் கபிலர் இருந்தார். பாரியின் தன் இரு மகள்களையும் கபிலரிடமே தமிழ் கற்குமாறு செய்தார். அம்மகளிரும் கல்வி கேள்விகளில் வல்லவராக திகழ்ந்தார்கள். 
இன்ப வாழ்க்கை 
                    தனது இரு பெண் குழந்தைகளின் அறிவின் திறத்தை அவர்கள் வாய் மொழியால் கேட்டு மகிழ்வார். பாரி கபிலரிடமே சென்று தமிழ் திறமையை பாராட்டுவார். பாரி தனது மகளுடன் மலை பகுதிகளில் சென்று இயற்கை ரசித்து இல்லம் திரும்புவது வழக்கம். 

முல்லைக்குத்தேர்  - பாரி


             பாரி, ஒரு நாள் மாலை இளவேனில் காலம். தான் பொன்னால்ஆன தேரில் மேல் ஏறி மலை வளம் சென்றான்; மலர்சோலை வழியே  செல்லும்படி தேர் பகனுக்குக்கட்டளை இட்டான். அந்த அடர்ந்த மலர்ச்சோலை அவர் மனம் மயங்கினார். 
              அந்த வனப்பகுதியில் அழகாக பூத்துக் குலுங்கிய முல்லைக்கொடி படர்ந்துச் செல்லக்  கொழுகொம்பு இன்றி தவிர்த்தது.பாரி  மனம் பதறினார். மனம் கலங்கினார். தன் வருத்தத்தைப் பிறருக்கு கூறி மாற்றி கொள்ளத் திறனற்ற அம்முல்லைக்கொடியின் அருகில் தன் பொன்னால்ஆன தேரை அது படருமாறு நிறுத்தி சென்றான். 
               அஃறிணைப் பொருள்களிடத்தும் இத்துணை பேரன்பு உடைய இவன் ,தன் குடிமக்கள் இடத்தில் எத்தகைய அன்புடையனாய் இருந்தார் என்று கூற வேண்டுமா? 
        இம்மன்னனின் அருங்குணத்தை கருதியே புலவர்கள் இவனை கடையேழு வள்ளல்களுள் ஒருவனாக வைத்து போற்றினர். 

பாரியின் கொடைசிறப்பு 

        பாரி வள்ளல் தன்னை நாடி வந்த புலவர், பாணர், விறலியர், கூத்தர் முதலியோர்க்கு இல்லை என்னாது அளவின்றி பொருள் ஈந்தான்; அவர் யார் வந்து தானம் கேட்டாலும் இல்லை என்றுச்சொல்வதில்லை. பாரி தன் நாட்டு மக்களைத் தன் உயிர் போல்  எண்ணி அவர்களுக்கு உதவி செய்வதில் உறுதியாக இருந்தார். 
               பாரியின் கொடைசிறப்பு !!
நாமும் கொடைசெய்ய தூண்டும் !!
     இன்னும் நிறைய படிக்க இதைத் தொட்டுப்படிக்கலாம். Read more


    இந்தப் புத்தகத்தைத் தொட்டுப்படிக்கலாம். தள்ளுபடி விலையில் புத்தகம் கிடைக்கும்.